

நெல்லையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்த போலீஸார் 9 மாதத்தில் நீதிமன்ற விசாரணை முடித்து 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் பெற்றுத் தந்துள்ளனர்.
திருநெல்வேலி தெற்கு ரத வீதியில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முருகன் (வயது 68) என்ற நபர் டவுன் மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்திய போலீஸார் 11 நாட்களில் குற்றப்பத்திரிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் புகார்தாரரின் வீட்டின் முன் பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் போலீஸாருக்கு முக்கிய சாட்சியாக பயன்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டவுன் மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீஸார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உரிய முறையில் வழக்கை நடத்தினர்.
இதனால் 9 மாதத்தில் நீதிமன்ற விசாரணை முடிந்து குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தது திருநெல்வேலி மகிளா நீதிமன்றம். சிசிடிவி கேமிராக்கள் குற்றம் நடப்பதை தடுப்பதுடன் ஒரு 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்கவும் பயன்பட்டுள்ளன .
இந்த வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்து 11 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 5 ஆண்டு தண்டனை வாங்கிக் கொடுத்த ஆய்வாளர் வேல்கனி மற்றம் அவருக்கு உறுதுணையாக இருந்த காவலர்களுக்கு நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
“ நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்கிற இயக்கத்தை நெல்லை காவல் துறையினர் சிறப்பான முறையில் கடைபிடித்து வருகின்றனர். காவலன் செயலியை சென்னைக்கு அடுத்து நெல்லை நகரில் காவல் துணை ஆணையர் சரவணன் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுச் சேர்த்து வருகிறார்.
சமீபத்தில் பேருந்தில் இளம்பெண்களுக்கு தொல்லை கொடுத்த நபரை அவர்கள் தகவல் கொடுத்த சில நிமிடங்களில் பேருந்து நிலையத்திற்குள் வருவதற்குள் போலீஸார் தயாராக இருந்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.