சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில் ஏழரை கிலோ மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

கொள்ளை நடைபெற்ற வீட்டில் போலீஸார் விசாரணை
கொள்ளை நடைபெற்ற வீட்டில் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏழரை கிலோ மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாநகரின் முக்கிய பகுதியான குரங்குசாவடியில் வசித்து வரும் ஏ.என்.எஸ். நகை உரிமையாளர் பாஷியம் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று (டிச.12) இரவு உள்ளே புகுந்து வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டின நகைகளை பின்பக்க கதவினை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த சூரமங்கலம் போலீஸார் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டார். கொள்ளை குறித்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சம்பந்தப்பட்ட அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலம் மாநகரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை அடித்தவர்கள் வீட்டில் இருந்த அலாரம் மற்றும் சிசிடிவி கேமரா வயர்களை துண்டித்து விட்டு கொள்ளை அடித்துள்ளனர்.

இதுகுறித்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் கூறுகையில், "இச்சம்பவத்தில் விரைந்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார் .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in