Published : 13 Dec 2019 01:08 PM
Last Updated : 13 Dec 2019 01:08 PM

3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது: விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரிக்கை 

3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி அருண் (33). இவர் 3 நம்பர் லாட்டரியால் ஏற்பட்ட கடன் நெருக்கடி மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நகைத் தொழிலாளியான அருண் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தன் வீட்டை விற்று, வாங்கிய கடனை அடைத்துள்ளார். பின்னர் வாடகை வீட்டுக்குக் குடிவந்த அருண், மீண்டும் வேலைக்குச் செல்லும்போது தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளார்.

சிறு சிறு தொகை பரிசாக விழுந்ததால், வருமானத்தை விட கடன் வாங்கி லாட்டரி டிக்கெட் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் கடன் சுமை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கத் தொடங்கியதும் அருள் நேற்று நள்ளிரவு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.

அதற்குமுன் அவர் காணொலியில் தனது இந்த முடிவுக்குக் காரணமான 3 நம்பர் லாட்டரியை ஒழிக்கவேண்டும், அப்படி செய்தால் என்னைப்போல் ஒரு 10 பேராவது பிழைப்பார்கள் என வேண்டுகோள் வைத்திருந்தார். இந்தக் காணொலி வைரலாகப் பரவியது.

3 நம்பர் லாட்டரியை ஒழிக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு ஏழை மக்களைச் சுரண்டும் ஒன்றாக மாறியுள்ளது.

3 நம்பர் லாட்டரி விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை என்ன என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியது:

விழுப்புரம் தற்கொலை விவகாரத்தில் காவல் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தற்கொலை செய்தவர் அதிக கடன் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். லாட்டரி பிரச்சினையும் காரணம் என்று தெரிவித்துள்ளார். லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த 3 நம்பர் லாட்டரி விவகாரம் பொது வெளியிடங்களில் நடத்துவதில்லை. செல்போன் மூலமாக நெட்வொர்க் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.

நாங்கள் தொடர்ச்சியாக கைது செய்து வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் லாட்டரி விவகாரத்தில் 200 வழக்குகள் பதிவு செய்து 220 பேரைக் கைது செய்துள்ளோம். அருண் தற்கொலை செய்துள்ள அந்த நகரத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் மட்டுமே இதுவரை 147 வழக்குகள் பதிவு செய்து 160 பேரைக் கைது செய்துள்ளோம். கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறோம். ஒரு மாதத்தில் அவர்கள் வெளியில் வருகிறார்கள். மீண்டும் அதே நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் கைது செய்கிறோம், சிறையில் அடைக்கிறோம். நேற்றிரவு இந்த விவகாரத்தில் முக்கியமான கிங்பின்கள் 12 பேரைக் கைது செய்துள்ளோம்.

அவர்கள்கூட ஏற்கெனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள்தான். இதை நாங்கள் தொடர்ச்சியாக கைது செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை எதுவும் உண்டா?

கண்டிப்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை இருக்கும். தொடர் குற்றச்செயல்களில் இதுபோன்று ஈடுபடும் நபர்களை, மெயின் ஏஜெண்டுகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்போம்.

இவ்வாறு விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x