

புதுச்சேரியில் சொத்துத் தகராறில் தந்தை, அக்கா மகனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து மூட்டைகளில் கட்டி வீசிய பிசியோதெரபிஸ்ட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி கோரிமேடு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (75). ஜிப்மரில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா (65), மகன் சிவக்குமார் (42), மகள் ஷகிலா. செவிலியரான ஷகிலா, திருமணமாகி தனியாக வசிக்கிறார். அவரது மகன் பரத்குமார் (14) தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். பிசியோதெரபி படித்திருந்த சிவக்குமார் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் வீட்டில் இருந்து 19.4.2017 இல் துர்நாற்றம் வீசியதால் கோரிமேடு டிநகர் காவல் நிலையத்துக்குப் புகார் சென்றது. மகள் ஷகிலாவிடம் விசாரித்த போது, 4 பேரையும் காணவில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்து போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட்டதில் வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்தது. மேலும் வீட்டுப் படிகள், சாலை என பல இடங்களில் ரத்தக்கறை காணப்பட்டது. இச்சூழலில் சிவக்குமாரும், வசந்தாவும் பிடிபட்டனர்.
போலீஸார் விசாரணை நடத்தியபோது, "சொத்துகளைப் பேரன் பரத்குமாருக்கு எழுதி வைக்கப்போவதாக செல்வராஜ் கூறியதால் ஆத்திரமடைந்த சிவக்குமார், தந்தை செல்வராஜை கத்தியால் குத்தில் கொன்றார். இதைப் பார்த்த பரத்குமாரையும் கொலை செய்தார். தாய் வசந்தா பயத்தில் அமைதியாக இருந்துவிட்டார். பின்னர் இருவரின் சடலங்களையும் துண்டு, துண்டாக வெட்டி, ஏழு சாக்கு மூட்டைகளில் கட்டி, தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, பூத்துறை அருகே பட்டாம்பாக்கத்தில் 200 அடி ஆழ செம்மண் பள்ளத்தாக்கில் சிவக்குமார் தூக்கி வீசியுள்ளார்" என்று தெரியவந்தது.
சொத்துக்காக தந்தை மற்றும் அக்கா மகனைக் கத்தியால் ஏப்ரல் 16-ம் தேதி குத்திக் கொலை செய்ததை சிவக்குமார் ஒப்புக்கொண்டார். அவரையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததாக வசந்தாவையும் போலீஸார் கைது செய்தனர்.
பின் சிவக்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இறந்தவர்களின் உடல்களை வானூர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர்.
இதையடுத்து இவ்வழக்கு தலைமை நீதிமன்ற நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் 34 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. வழக்கின் நீதிமன்ற விசாரணை மற்றும் வாதங்கள் முடிந்து, இன்று (டிச.12) தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வசந்தா விடுதலை செய்யப்பட்டார்.