

சென்னையில் குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணைப் பரிசோதனை செய்வதாகக் கூறி அவரிடம் சித்த மருத்துவர் பாலியல் அத்துமீறலில் ஈடுட்டார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சித்த மருத்துவரைத் தேடி வருகின்றனர்.
சென்னை பட்டாபிராம், மேற்கு கோபாலபுரத்தில் வசிப்பவர் ராஜா (32). இவரது மனைவி லட்சுமி (28). இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்குக் குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன் ராஜாவுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியபோது, தெரிந்தவர் ஒருவர் பரிந்துரையின் பேரில் கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியைச் சேர்ந்த சித்த மருத்துவர் அண்ணாதுரை என்பவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
அண்ணாதுரை கொடுத்த பச்சிலை வைத்தியத்தால் ராஜா மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு பூரண குணமடைந்தார். சிகிச்சையின்போது தனது மனைவி லட்சுமியையும் உடன் அழைத்துச் சென்றார் ராஜா. இதில் அந்தத் தம்பதியிடம் நல்லபடியாகப் பேசிப் பழகியுள்ளார் அண்ணாதுரை.
சிகிச்சை முடிந்த நிலையில் தங்களுக்குக் குழந்தையில்லை என்பதை வருத்தத்துடன் ராஜா-லட்சுமி தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ''என்னிடம் அருமையான சிகிச்சை உள்ளது. 6 மாதம் சிகிச்சை எடுத்து நான் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடுங்கள். அப்புறம் ஒரே வருடத்தில் குழந்தை பிறக்கும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார் சித்த மருத்துவர் அண்ணாதுரை.
இதன்பின்னர் தொடர்ந்து தம்பதியினர் சிகிச்சை எடுத்து வந்தனர். இதில் லட்சுமி மீது மருத்துவர் அண்ணாதுரைக்கு ஈர்ப்பு வந்துள்ளது.
''முக்கியமான மருந்து ஒன்று வரவேண்டியுள்ளது. அது வந்தவுடன் அழைக்கிறேன். வந்து வாங்கிக்கொள்ளுங்கள்'' என ராஜாவிடம் அண்ணாதுரை கூறியுள்ளார்.
நேற்று மாலை அண்ணாதுரை திடீரென ராஜாவுக்கு போன் செய்துள்ளார். மருந்தை வாங்கிக்கொள்ளுங்கள் எனக்கூற, ராஜா தான் வெளியில் இருப்பதாகத் தெரிவித்து தனது மனைவி லட்சுமியை மருந்து வாங்க அனுப்பியுள்ளார். லட்சுமியும் மருந்தை வாங்குவதற்காக அண்ணாதுரை வீட்டுக்குச் சென்றுள்ளார். லட்சுமியை வரவேற்ற அண்ணாமலை மருந்தைக் கொடுத்துள்ளார்.
அதற்கு முன் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும் என தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்வதுபோல் திடீரென பாலியல் அத்துமீறலில் இறங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அவரிடமிருந்து தப்பி வெளியில் ஓடிவந்து 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்குவந்த டிபி சத்திரம் போலீஸார் லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் போலீஸார் வருவதற்குள் அண்ணாதுரை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். தற்போது இந்த வழக்கு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.