

குழந்தைகளைக் காட்சிப்படுத்திய ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முனைப்பு காட்டி வரும் நிலையில், ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக திருச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பது, அதனைப் பரப்புவது, அதையொட்டி காணொலிகள் தயாரிப்பது என சமூக வலைதளம் மோசமான நிலையை நோக்கிச் செல்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என அரசுக்குப் பல கோரிக்கைகள் வந்தன.
நீதிமன்றங்களும் அதைச் சுட்டிக்காட்டின. ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.
இதையடுத்து மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை முடக்கியது. ஆபாச வலைதளங்களைப் பார்ப்பபவர்கள் எண்ணிக்கை உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.
இவ்வாறு நடந்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி அட்ரஸை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இதில் முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் வாட்ஸ் அப், முக நூல் மெசஞ்சரில் ஏராளமானோருக்கு குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசக் காணொலியைப் பகிர்ந்துள்ளார். இந்தச் செயலை அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். ஐடிஐ ஏசி மெக்கானிசம் படித்துள்ள கிறிஸ்டோபர் நாகர்கோவிலில் பணியாற்றி வருகிறார்.
அவர் சாமர்த்தியமாக நிலவன் நிலவன், ஆதவன் ஆதவன் என்கிற பெயரில் முகநூலில் இதுபோன்ற ஆபாசக் காணொலிகளைப் பகிர்ந்து வந்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி, “குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகளை நோக்கத்துடன் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்டோபர் பகிர்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ, ஐடி ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரணமாக ஆபாசப் படங்களைப் பார்த்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. அவர்கள் அஞ்ச வேண்டாம். ஆனால் குழந்தைகளைக் காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட காணொலிகளைப் பகிர்ந்தவர்கள், டவுன்லோடு செய்தவர்களை கைது செய்கிறோம்.
தற்போது போலீஸாரின் இந்த அறிவிப்பால் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பலரும் தங்கள் கணக்கை முடக்கியுள்ளனர். வலைதளங்களுக்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. போலீஸாரின் நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.