

தேனி வீரபாண்டி அருகே குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பூவியாபாரி லாரியில் மோதி உயிரிழந்தார். விபத்து சிசிடிவி.காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(30). பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் காளீஸ்வர பாண்டியன் என்ற மகன் உள்ளார்.
இவர் இன்று (புதன்கிழமை) காலை சின்னமனூரில் நடைபெறும் திருமணத்திற்காக தனது ஊரில் இருந்து மோட்டார்சைக்கிளில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.
வீரபாண்டி அருகே உப்பார்பட்டி விலக்கு எனும் இடத்தில் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் மூவரும் 20அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டனர். சம்பவ இடத்திலே வேல்முருகன் இறந்தார். மாரியம்மாளுக்கு கைமுறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வீரபாண்டி போலீஸார் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துப் பகுதிக்கு அருகில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் எடுக்கப்பட்டன. இதில் டிராக்டரை டிப்பர் லாரி ஒன்று முந்திச்சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வேல்முருகன் பதட்டத்தில் முன்பிரேக்கை பிடித்துள்ளார். அப்பகுதியில் மண் இருந்ததால் டூவீலர் சரிந்து லாரி டயரில் சிக்கியது. இதில் மூவரும் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் பரிதாபமாக உள்ளது.
லாரி டிரைவர் ஜான்போஸ்கோவை வீரபாண்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.