விழுப்புரம் அருகே கொலுசை அடமானம் வைத்துக் குடித்ததால் ஆத்திரம்: கணவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

விழுப்புரம் அருகே கொலுசை அடமானம் வைத்துக் குடித்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (36). கொத்தனாரான இவரது மனைவி சித்ரா (33). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. வெற்றிவேல் (12), ஹரிஷ் (10) ஆகிய 2 மகன்கள் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மதுப்பழக்கம் உள்ள செந்தில் தினமும் குடித்துவிட்டு சித்ராவிடம் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில் செந்தில் நேற்று (டிச.10) இரவு சித்ராவின் கால் கொலுசை அடகு வைத்துக் குடித்து விட்டார். இந்த விவரம் சித்ராவுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சித்ரா, செந்திலிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டு முன்பு இருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்து செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் செந்திலின் 40% உடல் கருகியது.

பின்னர் சித்ராவே செந்திலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சித்ராவைக் கைது செய்த கண்டமங்கலம் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in