

விழுப்புரத்தில் மனைவியைக் கொன்று நாடகமாடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம், சுதாகர் நகர், கரிகாலன் தெருவில் வசிப்பவர் நடராஜன் (60). இவர் திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது முதல் மனைவி இந்திரா (56). முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, நடராஜன் திருக்கோவிலூரைச் சேர்ந்த லீலா என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். லீலாவுக்கு வேலாயுதம் (23) என்ற மகன் உள்ளார்.
நடராஜனின் முதல் மனைவி இந்திரா, விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். வட்டிக்கும் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி இந்திரா தனது வீட்டில் தலையில் காயங்களுடன் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வட்டிக்குப் பணம் கொடுத்த தகராறில் இந்திரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் நடராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில் நடராஜன் கூறியதாவது:
"லீலாவின் மீது இருந்த காதலால் இந்திராவைப் பிடிக்கவில்லை. இந்திராவைத் திருமணம் செய்த அடுத்த மாதத்திலேயே நான் லீலாவைத் திருப்பதியில் திருமணம் செய்தேன். இந்திராவின் மகன் ஸ்ரீராம் கடந்த 2011-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பின் எனக்கும் இந்திராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்திரா உயிரோடு இருந்தால் நான் லீலாவுடன் வாழ முடியாது என்றெண்ணி இந்திராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். கடந்த 5-ம் தேதி இரவு என்னிடம் இந்திரா தகராறு செய்து விட்டு வீட்டின் ஒரு அறையில் தூங்கினார்.
இந்திராவின் தொல்லை தாங்காமல் 6-ம் தேதி அதிகாலை இரும்புக் கம்பியால் தூங்கிக்கொண்டிருந்த அவரின் தலையில் சரமாரியாகத் தாக்கினேன். இதில் அவர் இறந்தார். அந்தத் தடயத்தை மறைக்க அவரது முகத்திலும் மார்பிலும் பழைய துணிகளை போட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினேன். பின்னர் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூரில் இருக்கும் லீலா வீட்டுக்குச் சென்றேன்.
பின்னர் 7-ம் தேதி காலை எனது மனைவி இந்திராவை யாரோ அடித்துக்கொலை செய்திருப்பதாக போலீஸில் புகார் செய்தேன். இருப்பினும் போலீஸாரின் தீவிர விசாரணையில் நானே எனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன்".
இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று (டிச.10) இரவு நடராஜனை போலீஸார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீஸாரிடம் சிபாரிசு செய்த அரசு உயர் அதிகாரிகள்
கைது செய்யப்பட்ட நடராஜனிடம் படித்து தற்போது தமிழக அரசில் உயர் அதிகாரிகளாகப் பதவி வகிக்கும் அவரது மாணவர்கள் சிலர், நடராஜனை போலீஸார் சிக்க வைக்க பார்ப்பதாகவும், உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் என்று நடராஜன் தரப்பினர் தெரிவிப்பதாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர். இதனால் நடராஜனைக் கைது செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.