

ஒருதலை காதலால் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கட்டாயத்தாலி கட்டிய இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(24). இவர் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.
அவரிடம் காதலைச் சொல்ல தயங்கிய அவர் எப்படியாவது தனது மனதை தெரியப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு செய்தி கிடைத்துள்ளது.
அவர் ஒருதலையாக காதலிக்கும் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ள தகவல்தான் அது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் சென்று நான் உங்களை பல ஆண்டுகளாக காதலிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முகம் தெரியாத நபர் திடீரென சினிமா பாணியில் முன் தோன்றி காதலைச் சொன்னவுடன் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் எனக்கு அதெல்லாம் பிடிக்காது, என் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே மணப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜெகன் வற்புறுத்த என் பின்னால் சுற்றும் வேலையை விட்டுவிடுங்கள் எனக்கு வேறொருவருடன் திருமணம் பேசி நிச்சயமும் ஆகிவிட்டது, என் வழியில் வராதீர்கள் என எச்சரித்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நண்பர்கள் உதவியை நாடியுள்ளார்.
சினிமாவில் கதாநாயகனுக்கு உதவ காமெடி நண்பன் மோசமான ஐடியா கொடுப்பார், அதுபோன்று யாரோ ஒரு அறிவாளி நண்பர் அந்தப்பெண்ணின் கழுத்தில் ஊரறிய தாலி கட்டிவிட்டால் வேறு வழியில்லாமல் உன்னைத்தான் கட்டிக்கொள்வாள் என 1950-ம் ஆண்டுக்கால பத்தாம்பசலித்தனமான ஐடியாவைச் சொல்ல அதை நடத்த காரியத்தில் இறங்கியுள்ளார் ஜெகன்.
இன்று காலை வாணியம்படி அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்த அந்த பெண்ணை மறித்த ஜெகன் ஓடும் பேருந்திலேயே அப்பெண்ணின் கழுத்தில் கட்டாயத் தாலி கட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். இதைக்கண்ட பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஜெகனை பிடித்து அடித்து, உதைத்து வாணியம்பாடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி போலீஸார் ஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாயத்தாலி கட்டினால் மணமகள் உனக்கே சொந்தம் என மோசமான ஐடியா கொடுத்த நண்பரையும் போலீஸார் தேடி வருவதாக கூறப்படுகிறது. சினிமா பார்த்து அதை நிஜ வாழ்க்கையில் நடத்த நினைத்த ஜெகன் தற்போது கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.