

தங்கள் உடலில் தங்கத்தை மறைத்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறையினர் மடக்கிப்பிடித்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் நேற்று கொழும்புவிலிருந்து வந்திறங்கிய முகமது ஹிமாஸ் (28) என்பவரை, வெளியேறும் வழியில் சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மலக்குடலில் ரப்பர் இழையால் 3 பொட்டலங்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டார்.
510 கிராம் எடையுள்ள ரூ.19.8 லட்சம் மதிப்பிலான அந்த தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்திறங்கிய திண்டுக்கல்லை சேர்ந்த ஆயிஷா சித்திகா (32) என்பவரை வெளியேறும் வழியில் தடுத்து சோதனையிட்டனர். அப்போது சானிடரி நாப்கினுக்குள் ரப்பர் இழையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தைக் கண்டுபிடித்தனர். அதில் இருந்த 291 கிராம் எடையுள்ள ரூ.11.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.