

மனைவியையும், தாயையும் இழிவாகப் பேசிய நண்பனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார் நண்பர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
சென்னை, ராயப்பேட்டை ஹுசைன் நகரில் வசிப்பவர் அலிஷேர் (39). இவர் சவுதி அரேபியாவில் டெய்லராகப் பணியாற்றி வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். இவரது நண்பர் நாசர் அலி (38). ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் வசித்து வரும் இவர் சோஃபா பர்னிச்சர் வேலை செய்து வந்தார்.
அலிஷேரும், நாசர் அலியும் நல்ல நண்பர்கள். கடந்த சில நாட்களாக நாசர் அலி, சவுதியில் இருந்து வந்த தனது நண்பரின் மனைவியைப் பற்றி அடிக்கடி அவதூறாகப் பேசி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் ஒயிட்ஸ் சாலையில் உள்ள மதுக்கடையில் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அலிஷேரின் வீட்டுக்கு அருகில் உள்ள மீர்சா ஹைதர் அலிகான் தெருவில் நின்றபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். மது போதையில் நாசர் அலி மீண்டும் அலிஷேரின் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அலிஷேர் தனது வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து நாசர் அலியின் இடது பக்க மார்பில் இரண்டு இடங்களில் குத்தியுள்ளார். தடுக்க முயன்ற அவரது வலது முழங்கையில் வெட்டியுள்ளார். இதில் சமபவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் நாசர் அலி விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்து அலிஷேர் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆட்டோ மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நாசர் அலியைக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறி, அவரது உடலை ராயப்பேட்டை சவக்கிடங்குக்கு அனுப்பினர்.
தகவலறிந்து வந்த அண்ணா சாலை போலீஸார் அலிஷேரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். மது போதையால் நண்பனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.