மதுரையில் பலசரக்குக் கடையில் வெங்காயம் திருடியவர் கைது
மதுரையில் பலசரக்கு கடை ஒன்றில் நடிகர் வடிவேலு பாணியில் வெங்காயம் திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
தட்டுப்பாடு, பதுக்கல் காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று பெரிய வெங்காயத்தின் விலை ரூ.150 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160 ஆகவும் இருந்தது. இந்த விலை உயர்வு காரணமாக வெங்காயத்தை வாங்க இயலாமல் சாமான்ய மக்கள் தவிக்கின்றனர்.
வெங்காய விலை உயர்வால் ஓட்டல்களில் வெங்காயத்துக்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மதுரை கோமதிபுரத்தில் உள்ள மளிகைக் கடையில் நடிகர் வடிவேலு பாணியில் செயல்பட்டு 2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, அரிசி கடைக்கு போய் கடைக்காரரரின் கவனத்தை திசை திருப்பி கடையிலிருந்து இரும்பு தராசு மற்றும் எடைக்கற்களை சாக்குமூடையில் போட்டு திருடிச் செல்வார். இதே பாணியில் வெங்காய திருட்டு நடைபெற்றுள்ளது.
கோமதிபுரம் மளிகைக் கடைக்குப் பலசரக்கு வாங்க பையுடன் வந்தது போல் வந்த 51 வயது மதிக்கதக்க நபர், கடையிலிருந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் 2 கிலோ வெங்காயத்தை எடுத்து பையில் போட்டு வைத்துக் கொண்டார்.
பின்னர் கடை ஊழியர்களிடம் கடை உரிமையாளரிடம் அரிசி வாங்குவதற்காக ரூ.1500 முன்பணம் கொடுத்ததாகவும், தனக்கு இப்போது அரிசி தேவையில்லை என்றும், பணத்தை திரும்பத் தருமாறும் கேட்டுள்ளார்.
அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கி விட்ட அவரும் சென்றுவிட்டார்.
கடையில் கூட்டம் குறைந்ததும் கடை ஊழியர்கள் அந்த நபருக்கு ரூ.1500 கொடுத்தது பற்றி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள கடையில் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துள்ளனர்.
அப்போது ரூ.1500 வாங்கிய நபர், வெங்காயம் மற்றும் பல்வேறு பொருட்களைத் திருடிய தெரியவந்தது. அதே நபர் மாலையில் மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரித்த போது அவர் கோமதிபுரம் கொன்றை வீதியை சேர்ந்த அப்துல்ரகுமான் (51) என்பது தெரியவந்தது. அவர் இதே கடைக்கு அடிக்கடி வந்து பிஸ்கட் முதல் பாசுமதி அரிசி வரை பல்வேறு பொருட்களை திருடியது சிசிடிவி கேமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அண்ணாநகர் போலீஸார் அப்துல்ரகுமானை கைது செய்தனர்.
