

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனைவி அடித்து, முகத்தில் தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், சுதாகர் நகர், கரிகாலன் தெருவில் வசிப்பவர் நடராஜன்.
இவர் திருக்கோவிலூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இந்திரா(56) விழுப்புரத்திலும், 2-ம் மனைவி லீலா திருக்கோவிலூரிலும் வசித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் திருக்கோவிலூரில் தங்கிய நடராஜன், நேற்று முற்பகல் 11 மணிக்கு விழுப்புரத்தில் உள்ள முதல் மனைவி இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது, வீடு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இந்திரா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவரின் முகம் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நடராஜன் விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். டி எஸ் பி சங்கர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து டி எஸ் பி சங்கர் கூறியது, கொலை நடந்த வீட்டில் புலனாய்வு செய்ததில் சில தடயங்கள் கிடைத்துள்ளது. குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என்றார்.