பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது

பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது
Updated on
1 min read

மும்பையில் காதலனுடன் சேர்ந்து வளர்ப்புத் தந்தையைக் கொடூரமாகக் கொன்ற இளம் பெண் கைது செய்யப்பட்டார். தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் அவரை கொலை செய்ததாக மகள் ஒப்புக் கொண்டார்.

மும்பை மாஹிம் கடற்கரையில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சூட்கேஸைக் கைப்பற்றினர். அதில் ஆண் சடலம் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மாஹிம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அந்த சூட்கேஸில் இரண்டு சட்டைகள், ஒரு பேன்ட், ஒரு ஸ்வெட்டர் ஆகியன இருந்தன. அந்தச் சட்டையில் ‘அல்மோஸ் மென்ஸ்வேர்’ என்ற தையல் கடையின் அடையாளக் குறியீடு இருந்துள்ளது. அதனை வைத்துக் கொண்டே போலீஸார் தங்களின் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

மேலும் ஒரு சட்டைப் பையில் பென்னட் என்ற பெயரில் ரசீதும் இருந்தது.

பென்னட் என்ற பெயர் கொண்டவர்களை ஃபேஸ்புக்கில் தேடியபோது பென்னட் ரெய்பெல்லோ என்ற முகநூலில் இருந்த படங்கள் கொல்லப்பட்ட நபரின் தோற்றத்துடன் ஒத்துப்போனது. அந்த முகநூல் பக்கத்தில் பென்னட்டின் வீடு சாண்டா குரூஸ் பகுதியில் இருப்பதற்கான தகவலும் இருந்துள்ளது.

இதனையடுத்து போலீஸார் பென்னட்டின் வீட்டு முகவரியைக் கண்டறிந்தனர். அங்கு சென்றபோது பென்னட்டின் வளர்ப்பு மகள் ரியா (19) இருந்துள்ளார். அவர் விசாரணையில் முன்னுக்குப் பின் தகவல் தரவே அவரை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் நடந்த உண்மையைக் கூறியுள்ளார்.

ஆராத்யா ஜிதேந்திர பாட்டீல் என்ற ரியா பென்னட் ரெய்பெல்லோ தனது 16 வயது காதலுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

வளர்ப்பு மகள் என்று பாராமல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 26-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. ரியோ முதலில் ஒரு கட்டையால் தனது வளர்ப்புத் தந்தையை அடித்துள்ளார். அதில் மயங்கி அவரை பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அந்த சடலத்தை மூன்று நாட்களாக ஃப்ளாட்டிலேயே வைத்துள்ளார். அதன் பின்னர் அவர் தனது காதலனுடன் இணைந்து சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு சூட்கேஸில் நிரப்பியுள்ளார். அதை சூட்கேஸில் வைத்து வகோலா பகுதியில் உள்ள மித்தி நதியில் வீசியுள்ளார். மஹிம் கடற்கரையில் சடலம் ஒதுங்கியது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in