

தெலங்கானா என்கவுன்ட்டரில் பலியான நால்வரின் சடலங்களையும் திங்கள்வரை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் நேற்று (டிச.7) அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான முகமது ஆரிஃப், சென்ன கேசவலு, நவீன், சிவா ஆகிய 4 பேரின் சடலத்தையும் வரும் திங்கள்கிழமை வரை பாதுகாத்து வைக்குமாறு தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் நால்வரின் சடலத்தின் மீதான பிரேதப் பரிசோதனையையும் வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு வீடியோ பதிவை இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் உயர் நீதிமன்ற பதிவாளிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மஹபூப்நகர் மாவட்ட முதன்மை நீதிபதி அந்த வீடியோவைப் பெற்று தெலங்கானா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா பலாத்கார படுகொலை தொடர்பான வழக்கு வரும் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.