11 மாதங்களில் 86 பலாத்காரங்கள்; 185 பாலியல் வன்முறைகள்: உத்தரப் பிரதேசத்தின் குற்றத் தலைநகரமானது உன்னாவோ

இடது: உன்னாவோ போலீஸ் எஸ்.பி. விக்ராந்த் வீர். வலது: காவல் நிலையம்
இடது: உன்னாவோ போலீஸ் எஸ்.பி. விக்ராந்த் வீர். வலது: காவல் நிலையம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநில உன்னாவோவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த நவம்பர் வரை மொத்தம் 86 பலாத்கார சம்பவங்களும், 185 பாலியல் வன்முறை வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மாநிலத்திலேயே உன்னாவோவில்தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதால் உத்தரப் பிரதேசத்தின் 'குற்றத் தலைநகரம்' என்ற மோசமான அடைமொழியை உன்னாவோ பெற்றிருக்கிறது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 63 கி.மீ. தூரத்தில் இருக்கிறது உன்னாவோ. இந்த ஊரின் மக்கள் தொகை வெறும் 31 லட்சமே. ஆனால், இங்கு 11 மாதங்களில் 86 பலாத்காரங்கள்; 185 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.

உன்னாவோ பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் சம்பவம், அண்மையில் இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என பல முக்கியக் குற்றங்கள் இங்கு நடந்துள்ளன.

இதுவரை பதிவான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்றே போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கைதான வேகத்தில் பலரும் ஜாமீனில் வெளியிலும் வந்துள்ளனர்.

உன்னாவோ மோசமான அடையாளமாகி வருவது குறித்து உள்ளூர் மக்களோ, போலீஸார் பாலியல் வழக்குகளைக் கையாள்வதில் காட்டும் மெத்தனமே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் எனக் கூறுகின்றனர்.

"உள்ளூர் போலீஸ் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கின்றனர். அவர்களின் உத்தரவின்றி ஒரு சிறு நகர்வைக் கூட போலீஸ் தரப்பில் பார்க்க முடியாது. இதுதான் குற்றவாளிகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது" என்று உள்ளூர்க்காரர் ராகவ் ராம் சுக்லா கூறுகிறார்.

உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, போலீஸார் நியாயமாக நேர்மையாக நடந்து கொண்டதாக உன்னாவோவில் ஒரே ஒரு வழக்கைக்கூட பார்க்க முடியாது.

பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டுமல்ல, நிலம் மீதான உரிமைப் போராட்டங்களில்கூட போலீஸார் அரசியல்வாதிகளின் உத்தரவுகளின் பேரிலேயே நடந்து கொள்வார்கள். போலீஸார் அரசியல்வாதிகளின் அடியாட்கள் போன்றுதான் இங்கு செயல்படுகிறார்கள்" எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in