

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு அளித்திருந்தார் சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார். இந்நிலையில் அவரை இன்று (புதன்கிழமை) காலை தேனி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவப் பரிசோதனை முடிவு பெற்ற பின்பு தேனி சமதர்மபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரவிக்குமாரின் மகன் ரிஷிகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது:
முன் ஜாமீன் வழக்கில் ஆரம்பத்தில் ஆள்மாறாட்டத்தை ரவிக்குமார் மறுத்தார். அப்போது அரசு தரப்பில் ரிஷிகாந்த் பெயரில் வேறு ஒருவர் நீட் தேர்வை எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவரது விரல் ரேகையும், தேர்வு மையத்தில் பதிவாகி இருந்த விரல் ரேகையும் வேறுபட்டு இருப்பதை தடய அறிவியல் சோதனை முடிவு உறுதிப்படுத்தி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜராகி, சம்பவம் குறித்த உண்மைகளை தெரிவிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 30-ம் தேதி மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான ரவிக்குமார் வாக்குமூலம் கொடுத்தார்.
இந்நிலையில், டிசம்பர் 3 வரை தன்னை கைது செய்ய ரவிக்குமார் இடைக்கால தடை வாங்கியிருந்ததால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.