

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது:
கோவையை சேர்ந்த வெற்றிவேலன் என்பவர், கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் இடைத்தரகர் குணபாலன் என்பவர் மூலம் வங்கிக்கடன் வாங்க விண்ணப்பித்துள்ளார். இடைத்தரகர் குணபாலன் வங்கிக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதாகவும், ஆனால் கனரா வங்கியில் வெற்றிவேலனுக்கு கடன் கொடுக்க மறுத்ததாவும் கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த வெற்றிவேலன், நேற்று (டிச.3) வங்கிக்குள் இடைத்தரகர் குணபாலன் தலைமை மேலாளர் சந்திரசேகருடன் பேசிக்கொண்டு இருந்த போது அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வெற்றிவேலன் குணபாலன் மீது தாக்குதல் நடத்தினார்.
தடுக்கச் சென்ற வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் மீது சிறிய கத்தியால் தாக்கியதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கனரா வங்கி முதன்மை மேலாளர் சந்திரசேகர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வெற்றிவேலனை போலீஸார் கைது செய்து கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.