

கோவை, மேட்டுப்பாளையத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த சுவரின் உரிமையாளரை தனிப்படை போலீஸார் பிடித்துக் கைது செய்தனர்.
தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலையில் மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனியில் கட்டப்பட்டிருந்த 15 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழகத்தைப் பரபரப்பில் ஆழ்த்திய இந்த விபத்தைப் பலரும் கண்டித்து சுவர் கட்டிய உரிமையாளரைக் கைது செய்ய வலியுறுத்தினர். இங்குள்ள குடியிருப்பு அருகே உள்ள கட்டிடத்தை வாங்கிய நடூர் பகுதியைச் சேர்ந்த ஜவுளிக் கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவர், தமது வீடு அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் இடத்தின் ஒரு பகுதியில் ராட்சத கருங்கற்களால் ஆன சுற்றுச் சுவரை எழுப்பியுள்ளார்.
ஆதி திராவிடர் காலனி பகுதியை ஒட்டி, 80 அடி அகலம், 20 அடி உயரத்திற்கு அவர் சுவர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. சுவர் கட்டும்போதே அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாகவும், கருங்கற்களைக்கொண்டு எழுப்பப்பட்ட சுவரின் மீது பூச்சு வேலை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டதால் வருடக்கணக்கில் வெயில், மழை காரணமாக அது உதிர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்தது. சுவரை இடிக்கச் சொல்லி வற்புறுத்தியும் உரிமையாளர் மறுத்து வந்த நிலையில் விபத்து நடந்துள்ளது. ஆகவே 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்ரமணியத்தைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
போலீஸார் பொதுமக்களைத் தாக்கி, கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில் சுற்றுச்சுவர் கட்டிய உரிமையாளர் சிவசுப்ரமணியத்தைக் கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த சூழலில் சிவசுப்ரமணியத்தை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் மீது 304(எ) (அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல்) மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.