Published : 02 Dec 2019 11:20 AM
Last Updated : 02 Dec 2019 11:20 AM

மேட்டுப்பாளையத்தில் துயரம்; கனமழையால் வீடுகள் இடிந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு 

கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கோவை, மேட்டுப்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மீட்புப்பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்திலும் அதிக அளவு மழை பெய்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்து வருகிறது. இதில் தமிழகத்தில் இதுவரை 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பெரும் துயரம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி உறக்கத்திலேயே 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் குடியிருப்பு உள்ளது. கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள கருங்கல் சுவர் திடீரென இடிந்து பக்கத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்துள்ளது.

நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் வீட்டினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த அக்குடியிருப்பில் வசித்தவர்கள் உறக்கத்திலேயே கொல்லப்பட்டனர். விபத்து அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. 3 வீடுகளில் 15 பேர் இருந்த நிலையில், அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், பேரிடர் மேலாண்மைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். காலையிலிருந்து நடந்த மீட்புப்பணியில் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன.

விபத்து நடந்த குடியிருப்பில் நேற்றிரவு அவர்கள் உறவினர்கள் அங்கு தங்கியதால் பலியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாறைகள் அகற்றப்பட்ட பின்பு மேலும் உடல்கள் இருக்கிறதா? என தெரியவரும் என கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் விபரம்:

1.ஓபியம்மாள், 2.மங்கம்மாள், 3.சிவகாமி, 4.நிவேதா, 5.வைதேகி, 6.அருக்காணி, 7.ஹரிசுதா, 8.மஹாலட்சுமி, 9.சின்னம்மாள், 10.திலகவதி, 11.நதியா, 12.லோகுராம், 13.ஆனந்தன், 14.குரு, 15.ராமநாதன் .

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x