

பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு அவர்களும் ஒரு காரணம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசியதற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில மகளிர் ஆணையம் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் தரமான, சிறப்பான பல திரைக்கதைகளை உருவாக்கியவர். ஆனாலும் முருங்கைக்காய் நகைச்சுவையில்தான் அதிகம் பேசப்பட்டார். இந்தியாவிலேயே சிறந்த கதாசிரியர் விருதுபெற்றவர். ஆனால் சமீபத்தில் அவர் திரைப்பட விழா ஒன்றில் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. ஆனால், அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.
பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஆந்திர மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக மகளிர் ஆணையத்துக்கும் நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் பாக்கியராஜ்க்கு தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வருகின்ற திங்கட்கிழமை (டிச.2)விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.