சிவகாசியில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்து: ஒரு பெண் பலி; 5 பெண்கள் பலத்த காயம்

சிவகாசியில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்து: ஒரு பெண் பலி; 5 பெண்கள் பலத்த காயம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த கனியம்மாள் (55) இறந்தார். மேலும் 5 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

அப்போது மண்டபத்தின் ஒரு தூண் உடைந்து மண்டபத்தின் உணவகம் முழுவதும் இடிந்து சரிந்தது. இதில் மண்டபத்தை ஒட்டி இருந்த குடியிருப்புகளும் இடிந்து சேதம் அடைந்தன.

இதில் கனியம்மாள் (55) இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார்.

மண்டபத்தின் அருகே இருந்த இன்னும் சில வீடுகளும் சேதமடைந்தன. இதில், ஞான குருசாமி மனைவி நாகம்மாள் (73), கடற்கரை மனைவி அங்கம்மாள் (73), காளியப்பன் மனைவி சண்முகத்தாய் (73), கிருஷ்ணசாமி மனைவி ஈஸ்வரி (67), அவரது மருமகள் நிஷா (30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த சிவகாசி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இரு கால்களும் உடைந்து பலத்த காயமடைந்த நாகம்மாள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தென்மண்டல டிஐஜி ஆனி விஜயா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் சரவண குமார், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர்.

விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பகொட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in