முகம் பார்க்காமல் மலர்ந்த ஃபேஸ்புக் காதல்; காதலியை நேரில் கண்டவுடன் உதிர்ந்தது: காதலனைத் தீர்த்துக்கட்ட பெண்ணின் உறவுகள் சதி- தேனியில் சிக்கியது கூலிப்படை

முகம் பார்க்காமல் மலர்ந்த ஃபேஸ்புக் காதல்; காதலியை நேரில் கண்டவுடன் உதிர்ந்தது: காதலனைத் தீர்த்துக்கட்ட பெண்ணின் உறவுகள் சதி- தேனியில் சிக்கியது கூலிப்படை
Updated on
1 min read

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பெண்ணின் முகம் பார்க்காமல் காதலித்த இளைஞர், காதலியை நேரில் பார்த்தவுடன் திருமணத்துக்கு மறுத்ததால் அவரை கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட பெண்ணின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

தேனி காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நேரு மகன் அசோக்குமார்(27). ஐடி ஊழியரான இவர் ஃபேஸ்புக் மூலம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜூ மகள் விக்னேஸ்வரி (42) என்பவருடன் நட்பில் இணைந்துள்ளார்.

ஃபேஸ்புக் சாட் மூலம் இருவரும் பழகிவர அது நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதற்கிடையே காதலனைப் பார்க்க விக்னேஸ்வரி மலேசியாவில் இருந்து கடந்த நவ.1-ம் தேதி தேனி வந்தார்.

நேரில் பார்த்த அசோக்குமார் தன்னைவிட பெண்ணிற்கு வயது அதிகமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

பின்பு விக்னேஸ்வரி காதலன் அசோக்குமாரின் பெற்றோரிடம் சென்று திருமணம் செய்து வைக்கக் கோரி வலியுறுத்தினார்.

அதற்கு அவர்களும் வயது முதிர்ந்த பெண்ணை மருமகளாக ஏற்க முடியாது என்று மறுத்ததுடன் அறிவுரை கூறி அனுப்பிவிட்டனர்.

இதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் மனமுடைந்து மலேசியாவிற்குச் சென்ற விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மலேசியப் பெண் விக்னேஸ்வரியின் உறவினர்கள் காதலன் அசோக் குமாரையும், அவரது தந்தையும் கொலை செய்ய திட்டமிட்டனர். அதற்காக கூலிப்படையாக சிலரை தயார் செய்தனர்.

இந்தகுழுவினர் நேற்று போடியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவல் போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போடி நகர் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் விடுதிக்குச் சென்ற காவல்துறையினர் கூலிப்படை குழுவை கைது செய்தனர்.

இதில் பலர் போடி, கம்பம், பாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் காதலால் கொலை வரை சென்ற சம்பவம் இப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in