நீட் முறைகேடு: மாணவர்களைத் தொடர்ந்து பெற்றோர்களும் அடுத்தடுத்து விடுவிப்பு- நீர்த்துப் போகிறதா வழக்கு?

நீட் முறைகேடு: மாணவர்களைத் தொடர்ந்து பெற்றோர்களும் அடுத்தடுத்து விடுவிப்பு- நீர்த்துப் போகிறதா வழக்கு?
Updated on
1 min read

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் பிரவீனின் தந்தை சரவணனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் சிபிசிஐடி.போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிஸ், இர்பான் அவரது தந்தை முகமதுசபி, பிரியங்கா அவரது தாயார் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கிய நிலையில் பெற்றோர்க்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர் பிரவீனின் தந்தை சரவணன் தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இதற்கான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணை முடிவில் நீதிபதி பன்னீர்செல்வம், மாணவரின் தந்தை சரவணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மாணவர்களைத் தொடர்ந்து பெற்றார்களுக்கும் அடுத்தடுத்து ஜாமீன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே நீட் விசாரணை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ஆழமாக நடைபெறவில்லை என்று பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வந்த நிலையில் தற்ப்போது மாணவர்களைத் தொடர்ந்து பெற்றோருக்கும் அடுத்தடுத்து ஜாமீன் வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கில் அடிப்பட்ட பயிற்சி மையங்களோ, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்களோ, இடைத்தரகர்களோ பெரிய அளவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in