

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் சென்னை எழும்பூர் அருகே கஞ்சா போதையில் மோதிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களைப் பிடித்து கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் அருகே பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர். அவர்கள் மூவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அங்குள்ள பொதுமக்களுக்கு இடையூறாக அவர்கள் மோதிக்கொள்ள, பொதுமக்களில் ஒருவர் 100-க்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீஸார் அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் பட்டாளம், பின்னி மில் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் (23), அசைன் (18), வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த இர்ஃபான் (25) என்பது தெரியவந்தது.
மேற்கண்ட மூன்று பேரும் வள்ளுவர் கோட்டம் வழியாக எழும்பூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (அஸ்ஸாம் ) என்பவரை அடித்து அவரிடம் இருந்த செல்போனைப் பிடுங்கி வந்துள்ளனர்.
செல்போனைப் பறிகொடுத்த சுனில் இதுவரையில் எங்கும் புகார் அளிக்கவில்லை. அவர்களிடமிருந்த செல்போனை போலீஸார் வாங்கிப் பார்த்ததில் அதன் பின்னால் செல்போன் உரிமையாளரின் ஆதார் அடையாள அட்டை இருந்துள்ளது. அதில் சுனில், அஸ்ஸாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிப்பறி செய்த போனை யார் வைத்துக்கொள்வது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதமே சண்டைக்கான காரணம் என்பது தெரியவந்தது. செல்போனை வழிப்பறி செய்த குற்றத்திற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டதாகவும் மூவரையும் கைது செய்த போலீஸார், வழிப்பறிக்குப் பயன்படுத்திய பல்சர் 220 சிசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.