Published : 26 Nov 2019 04:41 PM
Last Updated : 26 Nov 2019 04:41 PM

சில்லறை இல்லை என இறக்கிவிட்ட நடத்துநர்: ஆட்டோ பிடித்து வந்து பேருந்துக் கண்ணாடியை உடைத்த பயணி

சென்னை

சென்னை, தேனாம்பேட்டையில் சரியான சில்லறை இல்லை என நடத்துநரால் இறக்கி விடப்பட்ட பயணி ஒருவர், ஆட்டோ பிடித்து வந்து பேருந்தை மறித்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46). இவர் சென்னை தி.நகரில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். கமலக்கண்ணனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அனைவரும் சொந்த ஊரான திருவண்ணாமலையில் வசித்து வருகின்றனர். இன்று கமலக்கண்ணணைப் பார்க்க அவரது இளைய மகன் சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த மகனை திருவண்ணாமலை செல்ல ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு தி.நகர் செல்ல பேருந்தில் ஏறியுள்ளார் கமலக்கண்ணன். பேருந்தில் டிக்கெட் எடுக்க சில்லறை இல்லாததால், அவரிடம் இருந்த 500 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார்.

ஆனால், நடத்துநர் சில்லறை இல்லை என அடுத்த பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். இதேபோல் இரண்டு பேருந்துகளில் கமலக்கண்ணன் சில்லறை இல்லாத காரணத்தினால் இறக்கி விட்டுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார் கமலக்கண்ணன். பின்னர் கமலக்கண்ணன் தனது வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ தேனாம்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பேருந்தில் சில்லறை இல்லை என இறக்கிவிட்ட பேருந்துகளில் ஒன்றான தடம் எண் 23-சி அவரது ஆட்டோவைத் தாண்டிச் சென்றுள்ளது.

இதைப் பார்த்து மேலும் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், சாலையில் கிடந்த கல்லை எடுத்து 23-சி பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது எறிந்துள்ளார். இதில் கண்ணாடி உடைந்து சிதறியது.

திடீரென கல்லால் தாக்கப்பட்டு கண்ணாடி உடைந்ததைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்து பேருந்தை ஓரங்கட்டினார். சில பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்தைவிட்டு இறங்கி ஓடினர். அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் கமலக்கண்ணனை மடக்கிப் பிடித்து சாலையோரம் அமர வைத்தனர்.

ஏன் பேருந்தின் மீது கல் எறிந்தாய் என ஓட்டுநர் கேட்க, ஏன் சில்லறை இல்லை என்று நடத்துநர் சொன்னார், அதனால்தான் உடைத்தேன் என்று கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவரைத் திட்டிக்கொண்டே தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு போன் செய்தனர். அங்கு வந்த போலீஸார் கமலக்கண்ணனைப் பிடித்து விசாரித்தனர். ஏன் கண்ணாடியை உடைத்தாய் என்று போலீஸார் கேட்க, அவர்கள் மட்டும் டிக்கெட்டுக்கு சில்லறை இல்லை என்று கீழே இறக்கிவிடலாமா? அதற்குத்தான் கண்ணாடியை உடைத்தேன் என்று கூறியுள்ளார்.

கமலக்கண்ணன் பேசுகையில் அவர் சற்று மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர் போன்று சந்தேகம் எழுகிறது என போலீஸார் தெரிவித்தனர். இருந்தாலும் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததற்காக அவர் கைது செய்யப்பட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்திய பிரிவின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு, கண்ணாடி உடைந்த சம்பவத்தினால் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர். இதனால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x