

ஓமலூர் அருகே கல்லுடைக்கும் கூலித் தொழிலாளிக்கு நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தையை 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி சேத்துப்பாதை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. கல் உடைக்கும் கூலித் தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இரண்டாவது பிரசவத்தில் ஆகாஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான உமாவுக்கு, காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால், இந்தக் குழந்தையை வளர்க்க முடியாமல் விற்பனை செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குழந்தையை விற்பனை செய்துவிட்டதாக, தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் சேத்துப்பாதைக்குச் சென்று கிராம நிர்வாக அலுவலர், சின்னதம்பி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவரது வீட்டில் பிறந்த பெண் குழந்தை இல்லை என்பதை உறுதி செய்தார். பின்னர் அவர்களிடம் இன்னும் ஒரு மணிநேரத்தில் குழந்தையை காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறினர். அப்போது வெகு நேரமாகியும் குழந்தையைக் கொண்டு வரவில்லை.
இதனால், மேலும் சந்தேகமடைந்த வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று (நவ.26) விசாரணை மேற்கொண்டனர். அப்போது டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மற்றொரு சின்னதம்பி - ஜமுனா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதும், அதனால், சின்னதம்பி - உமா தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தையை அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சின்னதம்பி, உமாவை டேனிஷ்பேட்டைக்கு அழைத்துச் சென்று பெண் குழந்தையை மீட்டு ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையை காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து, பரிசோதனை செய்தனர்.
பின்னர், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி, குழந்தையை விற்பனை செய்யக்கூடாது என்றும் குழந்தையை விற்பனை செய்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கணவன் - மனைவி இருவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தையை வாங்கிய தம்பதியையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக தகவல் அறிந்த அதிகாரிகள் குழந்தையை ஒருமணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து மீட்டனர்.