

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், டிக்டாக்கில் பிரபலமான 7 வயது சிறுமியை அவரது சித்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடா அடுத்த பகடாலபேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி சத்தியவேணி. இவர்களுக்கு தீப்திஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக சத்தியவேணி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் சதீஷ் கைக்குழந்தையாக இருந்த தீப்திஸ்ரீயை பராமரிப்பதற்காக இன்னொரு திருமணம் செய்து கொண்டுள்ளார். சாந்தகுமாரி என்ற அந்தப் பெண்ணும் ஆரம்ப நாட்களில் குழந்தை மீது மிகுந்த பாசத்துடனேயே இருந்துள்ளார்.
ஆனால், அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பின்னர் சாந்தகுமாரி தனது நடத்தையில் மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை தீப்திஸ்ரீக்கு தற்போது 7 வயதாகிறது. ஆரம்பநாட்களில் அன்பாக இருந்த சித்தி தற்போது கொடூரமாக நடப்பது தீப்தியின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருமுறை தீப்தி தாக்கப்படுவதை நேரில் கண்ட அவரின் பாட்டி பேபி குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். வயதானவர் என்பதால் குழந்தையின் பராமரிப்புக்காக மகனிடம் மாதந்தோறும் ரூ.2000 பணம் கோரியுள்ளார்.
பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு சதீஷ்குமார் ரூ.2000 வழங்க ஒப்புக் கொண்டார். கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் குழந்தை தீப்திஸ்ரீக்கு ரூ.2000 அனுப்பிவந்தார். தீப்தி பாட்டியுடன் நிம்மதியாக இருந்துள்ளார். டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு அந்த ஊரில் பிரபலமடைந்தார்.
ஆனால், தீப்திக்கு ரூ.2000 பணம் அனுப்புவதன் நிமித்தமாக சாந்தகுமாரி தொடர்ந்து சதீஷ்குமாருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில்தான், சாந்தகுமாரி கொடூரமாக யோசித்துள்ளார். தீப்திஸ்ரீயை கொலை செய்துவிட்டால் ரூ.2000 கொடுக்கத் தேவையில்லை என யோசித்திருக்கிறார்.
இந்த எண்ணத்துடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமி இருந்த ஊருக்குச் சென்ற சாந்தகுமாரி அவரை பேசி அழைத்துச் சென்றுள்ளார். ஏரிக்கரையில் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் சாக்குப்பையில் சடலத்தை அடைத்து ஏரியில் வீசியுள்ளார்.
குழந்தையைக் காணவில்லை என பேபி, சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்பகுதியின் பள்ளிக்கூடம் அருகில் உள்ள சிசிடிவிக்களை சோதனையிட்ட போலீஸார், அதில் சாந்தகுமாரி சிறுமியை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லும் காட்சிகளைப் பார்த்தனர்.
அதன் அடிப்படையில் சாந்தகுமாரியைப் பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சாந்தகுமாரியை கைது செய்த போலீஸார் சட்ட நடவடிக்கைகளுக்குப் பின் அவரை சிறையில் அடைத்தனர்.