

சென்னையில் இதுவரை மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் என திருட்டுப் போன நிலையில் லாரி ஒன்றை ஒரு கும்பல் திருடிச் சென்றது.
சென்னை, ஆலந்தூர், மகாத்மா காந்தி சாலையில் வசிப்பவர் அசன் மைதீன். இவருக்குச் சொந்தமாக லாரி ஒன்று உள்ளது. லாரி சவாரிக்குப் போகும் நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மகாத்மா காந்தி சாலை ஓரமாக வழக்கமாக லாரியை நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை (நேற்று) வந்து பார்த்தபோது லாரியைக் காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
லாரியை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் உரிமையாளர் அசன் மைதீன் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் லாரி காணாமல் போவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் திருமுடிவாக்கம் அருகே மிகப்பெரிய டாரஸ் லாரி ஒன்றை ஒரு கும்பல் திருடிச் சென்றது. சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த லாரியை போலீஸார் கண்டுபிடித்தனர். லாரி திருடிய கும்பலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஆலந்தூரில் லாரி காணாமல் போனது. இதுகுறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற லாரிகளைத் திருடும் கும்பல் திருடிய லாரியை தனி இடத்தில் வைத்து ஒரே நாளில் லாரியைப் பகுதி பகுதியாகப் பிரித்து விற்றுவிடுவதாக லாரி அதிபர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள லாரியை வாங்கும் உரிமையாளர்கள், சில ஆயிரம் செலவு செய்தால் அதில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த முடியும். ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டால் லாரி திருடு போனால் எங்கு செல்கிறது என்பதை எளிதாக போலீஸார் கண்டுபிடிக்க முடியும். உரிமையாளரும் அதை அறிய முடியும். லாரி திருடு போவதைத் தடுக்க முடியும், என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன லாரியைப் பிடிக்க போலீஸார் முயற்சி எடுத்து வருகின்றனர். விரைவில் திருடிய கும்பல் பிடிபடும் எனத் தெரிகிறது.