

பொள்ளாச்சியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குடோனுக்கு ‘சீல்' வைத்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், உணவுப் பாது காப்பு துறையின் கோவை மாவட்ட நியமன அலுவலர் கே.தமிழ் செல்வன் தலைமையிலான அதிகாரிகள், கடந்த ஒரு வார மாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி கூட்ஸ்செட் வீதியிலுள்ள ஒரு குடோனில் அரசால் தடைசெய்யப் பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் மாவட்ட நியமன அலுவலர் கே. தமிழ்செல்வன் தலைமை யில், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சுப்புராஜ், செல்வ பாண்டி, காளிமுத்து, சிவானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், தடைசெய்யப்பட்ட பதான், கூல் லிப்ஸ், கணேஷ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 1100 கிலோ இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து, குடோனுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். குடோன் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த சாதிக் (35) தலைமறைவானர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடத்திய ஆய்வில் சுமார் 3 டன் அளவுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் இருந்து 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்கு பின்னர், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை யாரேனும் விற்பனை செய்வது தெரியவந்தால், 9444042322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையினர் வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.