

சென்னை
மாமனார், மைத்துனர் கொலை செய்யப்பட்ட நிலையில் சொத்துக்காக மாமியாரை மருமகள் துப்பாக்கி முனையில் கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த படப்பையைச் சேர்ந்தவர் சுப்புராயன். சாலை ஒப்பந்ததாரரான இவருடைய மனைவி பத்மினி (65).
இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
மூத்த மகன் செந்தில், இரண்டாவது மகன் ராஜ்குமார். சுப்புராயன் படப்பையில் வீடு, நிலங்கள் வாங்கி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மூத்த மகன் செந்திலுக்கு பெரியபாளையம் அருகே கொமக்கம்பேடுவைச் சேர்ந்த மேனகா (29) என்பவரையும் 2-வதுமகன் ராஜ்குமாருக்கு ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஆனந்தி என்பவரையும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், 2014-ம் ஆண்டு சொத்துக்காக தனது தம்பி என்றும் பாராமல் ராஜ்குமாரை கூலிப்படை மூலம் அண்ணன் செந்தில் கொலைசெய்துள்ளார். இந்த கொலை வழக்கில் கைதாகி சிறை சென்ற செந்தில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின் அவர் மாயமாகியுள்ளார். இதற்கிடையில், சுப்புராயன், தனது சொத்துக்களை 2 மகன்களின் குடும்பத்தினருக்கும் சமமாக பிரித்து கொடுத்துள்ளார். மேலும் தங்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு வீடு மற்றும் சிறிதளவு நிலத்தை வைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், செந்திலின் மனைவி மேனகா தனது தோழியின்வீட்டில் தங்கியுள்ளார். அப்போதுதோழியின் கணவர் ராஜேஷ் கண்ணா, 2018-ம் ஆண்டு மேனகாவின் மாமனார் சுப்புராயனை கொலை செய்தார். இந்த வழக்கில்கைதாகி சிறை சென்ற ராஜேஷ்கண்ணா பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
சொத்துக்காக தனது 2-வது மகன் ராஜ்குமார் மற்றும் கணவர் சுப்புராயன் கொலை செய்யப்பட்ட நிலையில், மூத்த மகன் செந்திலும் மாயமானதால் படப்பையில் உள்ள வீட்டில் பத்மினி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூத்த மருமகள் மேனகா அடிக்கடி தனது மாமியார் பத்மினி வீட்டுக்குச் சென்று, அவரிடம் உள்ளரூ.5 கோடி மதிப்புள்ள மீதி சொத்தையும் எழுதி தரும்படி கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் பயந்துபோன பத்மினி, அயனாவரத்தில் உள்ள தனது அக்கா மகள் அமுதா வீட்டுக்குச் சென்று அங்கு தங்கியுள்ளார்.
இதையறிந்த மேனகா, ராஜேஷ்கண்ணா மற்றும் கூட்டாளிகளுடன் 2 கார்களில் அமுதாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த தனதுமாமியார் பத்மினி மீது தாக்குதல் நடத்தி அவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா, அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அயனாவரம் சரக காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். தங்களைபோலீஸார் தேடுவரை அறிந்த கடத்தல் கும்பல், நேற்று முன்தினம் அயனாவரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பத்மினியை இறக்கி விட்டுவிட்டு தப்பியது.
கடத்தல் கும்பல் 2 நாட்களாக பெரும்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவரை கொண்டு சென்றுள்ளது. பின்னர், சொத்தை எழுதி தரும்படி கேட்டுஅடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் போலீஸார் நெருங்கி வந்துவிட்டதால் தன்னை உயிருடன் விட்டுவிட்டதாகவும் இல்லாவிட்டால், சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு என்னையும் கொலை செய்து இருப்பார்கள்” என பத்மினிதெரிவித்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் மூத்த மருமகள் மேனகாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். சொத்துக்காக சுப்புராயன், ராஜ்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில், மாயமான அவரது மூத்த மகன் செந்திலும் கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதில், செந்திலின் மனைவியான மேனகாவுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணா பிடிபட்டால் அனைத்து கேள்விகளுக்குமான மர்மமும் விலகும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.