

நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஜெகன், குமரேசன். சகோதரர்களான இருவரும் ஜவுளி வியாபாரம் செய்துவருகின்றனர்.
இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக இன்று காலை வந்துள்ளனர்.
சுவாமி கும்பிட்டுவிட்டு அருகிலுள்ள வைகை ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றனர். அப்போது ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீர் இழுத்துசெல்வதாகக் கூறி காப்பாற்றக் கூச்சலிட்டனர். இவர்களைக் காப்பாற்ற சகோதரர்கள் இருவரும் ஆற்றில் குதித்தனர்.
வைகை ஆற்றில் மணல் திருட்டு அதிகம் இருந்த நிலையில், மணல் கொள்ளையர்கள் தோண்டிய பள்ளத்தால் ஆழமான பகுதிக்குச் சென்றதில் சுழலில் சிக்கி ஜெகன், குமரேசன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களால் மீண்டு வரமுடியவில்லை. இதனால் இருவரும் உயிரிழந்தனர்.
தங்கள் குடும்பத்தினரின் கண்முன்னே சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆற்று நீரில் சிக்கி காப்பாற்ற கூச்சலிட்ட பெண்கள் கரைதிரும்பினர். நிலக்கோட்டை போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.