

கோவை
கோவை அருகே, தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது, ரயில் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலைச் சேர்ந்த சித்திக்ராஜா (22), நிலக்கோட்டை ராஜசேகர் (20), தேனி மாவட்டம் பல்ல வராயன்பட்டியைச் சேர்ந்த விக் னேஷ்(22) ஆகிய மூவரும் சூலூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தனர். கல்லூரி அருகே, வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி (22), கவுதம் (22). இருவரும், அதே கல்லூரியில் வேறொரு பிரிவில் படித்துள்ளனர். முன்னாள் மாணவர்களான இவர் களும், சித்திக்ராஜா, ராஜசேகர், விக்னேஷ் ஆகியோரும் நண்பர் கள். அரியர்ஸ் தேர்வு எழுதுவதற் காக, நேற்று முன்தினம் கோவைக்கு வந்த கருப்பசாமியும் கவுதமும் சித்திக்ராஜா, ராஜசேகர், விக்னேஷ் தங்கியிருக்கும் அறைக்கு சென்றனர். அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில், 5 பேரும் வெளியில் புறப்பட்டனர்.
சூலூருக்கும் - இருகூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது கேரளாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா ரயில் வருவதை கவனித்த இவர்கள் எழுந்து தப்பிக்க முயன்றனர். அப்போது சித்திக் ராஜா, ராஜசேகர், கருப்பசாமி, கவுதம் ஆகிய நான்கு பேரும் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்ததால் விக்னேஷ் தப்பினார்.
இது தொடர்பாக, கோவை சரக ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை கூறும்போது, ‘‘5 பேரும் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அறையில் மது அருந்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து மீண்டும் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, தண்டவாளத்தில் வந்து மது அருந்தியுள்ளனர். முழு போதை யில் இருந்ததால், 4 பேராலும், ரயில் வருவதை கண்டறிந்து உடனடியாக எழுந்து ஓட முடிய வில்லை.
இதனால் ரயில் மோதி உயிரிழந் துள்ளனர். அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர், நேற்று அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்ப வத்தை தொடர்ந்து மேற்கண்ட இடங்களில் கண்காணிப்புப் பணி மீண்டும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது’’ என்றார்.