பிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு: கரூரில் அதிர்ச்சி சம்பவம்

மாணவி கோமதி - பள்ளியில் திரண்ட உறவினர்கள்
மாணவி கோமதி - பள்ளியில் திரண்ட உறவினர்கள்
Updated on
1 min read

கரூர்

கரூரில் பிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் மகள் கோமதி (17). இவர் கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

மாணவி கோமதி இன்று (நவ.11) பள்ளிக்கு வந்த நிலையில் சோர்வாக இருந்துள்ளார். தூங்குவது போல காணப்பட்ட கோமதியை ஆசிரியை முகம் கழுவி வருமாறு கூறியுள்ளார். பாத்ரூமில் முகம் கழுவி விட்டு வகுப்பறைக்குள் நுழைந்த கோமதி மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், மாணவி முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டதால் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் ஆகியோர் மருத்துவமனை வந்தனர். அப்போது, பள்ளி முதல்வர் ரோஸிவெண்ணிலா உடனிருந்தார்.

பள்ளியில் நோட்ஸ் வாங்க மகள் கோமதி பணம் கேட்டதாகவும் இன்று வந்து தருவதாக நாங்கள் கூறிய நிலையில் அவர் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in