Published : 11 Nov 2019 09:54 AM
Last Updated : 11 Nov 2019 11:22 AM
விருதுநகர்
விருதுநகரில் தொழில் நஷ்டம் காரணமாக மல்லி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் மல்லி வியாபாரியும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட அவரின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரும் வழியிலேயே இறந்தார்.
விருதுநகர் ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் இன்ப மூர்த்தி (65). இவர் பெரிய வள்ளிகுளம் பகுதியில் மல்லி மில் நடத்தி வருகிறார். இவர் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. குஜராத் பகுதியில் மல்லி இறக்குமதி செய்ததில் சுமார் 40 லட்சம் வரை கடனில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.
வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் இவர் சில நாட்களாக மனம் உடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் (திங்கள்கிழமை) தனது மில்லில் இன்ப மூர்த்தி மனைவி திலகவதி மற்றும் மகன் கண்ணன்(40) குடும்பத்துடன் விஷம் அருந்தியுள்ளனர்.
வழக்கம்போல் இன்று காலை மில்லை துப்புரவு செய்யும் பணியாளர் வந்து கதவைத் திறந்தபோது உள்ளே இன்ப மூர்த்தி மற்றும் அவரது மகன் கண்ணன் இறந்து கிடந்ததை கண்டுள்ளார். திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
துப்புரவு பணியாளர் சூலக்கரை போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திலகவதியை விருதுநகர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திலகவதியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.
இன்பமூர்த்தி தனது தற்கொலைக்குக் காரணம் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததுதான் என கடிதம் எழுதி வைத்துள்ளா.ர் இந்த கடிதத்தைக் கைப்பற்றிய சூலக்கரை போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.