

காக்கிநாடா
இரண்டு ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
காக்கிநாடா ஊரக வட்டாரப் பகுதிக்கு உட்பட்ட வலசபகலா கிராமத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து காக்கிநாடா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
''கட்டுமானத் தொழிலாளியான சுவர்ணராஜு (24) தனது சைக்கிள் டயர்களில் காற்றடிக்க வலசபகலாவில் உள்ள சம்பா என்பவரின் சைக்கிள் கடைக்குச் சென்றார். சைக்கிள் கடைக்காரர் காற்றடிக்கும் பம்ப்பைக் கொண்டுவந்து எந்த டயரில் காற்று இறங்கிவிட்டதோ அதற்கு காற்றடித்துக் கொடுத்துள்ளார்.
பின்னர் சுவர்ணராஜுவிடம் காற்றடித்ததற்கான இரண்டு ரூபாயை சம்பா கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்பது அப்போதுதான் சுவர்ணராஜுக்குத் தெரியவந்துள்ளது. தன்னிடம் தற்போது பணம் இல்லை, பிறகு தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இரண்டு ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உடனடியாக காற்றடித்துக் கொடுத்த கடைக்காரர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் சுவர்ணராஜு சம்பாவை சரமாரியாக அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து சம்பாவின் நண்பர் அங்கு வந்து தனது நண்பரைக் காப்பாற்றுவதற்காக கடையிலிருந்து ஒரு இரும்பு ராடைக்கொண்டு சுவர்ணராஜுவின் தலையில் அடித்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் கட்டுமானத் தொழிலாளி சுவர்ணராஜுவை உள்ளூர்வாசிகள் காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பா மற்றும் அப்பா ராவ் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பா போலீஸார் வருவதைப் பார்த்து தப்பி ஓட முயன்றார். இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
பிடிஐ