

ஆண்டிபட்டி
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலி்த்தொழிலாளிக்கு தேனி மகிளா நீதிமன்றம் 10ஆண்டு சிறைதண்டனை விதித்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்மாள்பட்டியைச் சேர்ந்தவர் சின்னவேலு. இவரது மகன் கருப்புச்சாமி(31). கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 2018-ல் இதே பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜதானி போலீஸார் குழந்தை பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கில் கருப்பசாமிக்கு பத்தாண்டு சிறை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7லட்சம் உதவித் தொகையை தமிழக அரசு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பான முறையில் விசாரணை செய்த காவல்துறையினர், அரசு வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி ஆகியோரை தேனி எஸ்பி.சாய்சரண்தேஜஸ்வி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.