

விழுப்புரம்
திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை ஆற்றில் புதைத்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தில் வசிப்பவர் வரதராஜன் (25), சவுந்தர்யா(19) தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 14 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததைக் கேட்டவுடன் மனமுடைந்து வரதராஜன் அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்த உறவினர்கள், மருத்துவமனையில் இருந்த சவுந்தர்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்த பிறகு குழந்தை பிறந்த 3-வது நாள் குழந்தையை வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் எடுத்துச் சென்று அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் புதைக்கச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்டு மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். பின்னர் கணவரின் நடத்தையால் பயந்துபோன சவுந்தர்யா தாய் வீட்டில் பிள்ளையை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் திருந்திவிட்டதாக வரதராஜன் தன் மனைவி சவுந்தர்யாவிடம் நாடகம் ஆடி, நாம் ஒன்றாக வாழலாம் எனக் கூறி நேற்று (நவ.5) காலை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த குழந்தையை அத்தாண்ட மருதூர் தென்பெண்ணை ஆற்றில் கொண்டு சென்று புதைத்துள்ளார் வரதராஜன்.
விட்டில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா தமது உறவினரிடம் கூறியுள்ளார். பின்னர் வரதராஜன் மேல் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தென்பெண்ணை ஆற்றில் சென்று பார்த்துள்ளனர். அங்கு சில இடங்களில் பள்ளம் தோண்டி இருந்தது தெரிந்துள்ளது. இதனை அடுத்து அங்கு தோண்டிப் பார்த்தபோது, குழந்தையின் மேல் துணியைச் சுற்றி புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வரதராஜனை விசாரணை செய்ததில், குழந்தையைத் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இத்தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலிஸார் வரதராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோவிலூர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட குழந்தை, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.