

விழுப்புரம்
ஓய்வுபெற்ற அரசு செவிலியர் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் அருகே நேமூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த கார்த்திகேயன் மனைவி சரசு (33). இவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு வைஷாலி (6) என்ற மகள் இருந்தார்.
கடந்த ஆறு மாதம் முன்பு சரசுவின் கணவர் கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பணியில் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தன் தந்தை வீட்டில், மகள் வைஷாலியுடன் வசித்து வந்த சரசு, கணவர் இறந்ததால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.5) காலை அதே ஊரில் உள்ள விஜயராமன் என்பவரின் விவசாயக் கிணற்றில் தன் மகளைத் துப்பட்டாவில் கட்டிக்கொண்டு குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த அக்கிராம மக்கள் இருவரது உடலையும் மீட்டனர். இதுகுறித்து கஞ்சனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.