

விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் சிலர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விருதுநகர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அருப்புக்கோட்டை வி.வி.ஆர். காலனியில் பொன்னுகுமார் (58) என்பவர் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, பொன்னுகுமாரைக் கைதுசெய்த போலீஸார் அவர் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், செம்பட்டி பகுதியில் சிலர் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வாங்குவோரிடம் கிலோ ரூ.5க்கு பொன்னுகுமார் விலைக்கு வாங்கி அதைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும், சில சமயம் ரேஷன் அரிசியை உடைத்து குருணையாக்கி மாட்டுத் தீவினமாகவும் விற்பனை செய்தது தெரியவந்தது.
அதோடு, இலவச ரேஷன் அரிசி வாங்கி அதை பொன்னுகுமாருக்கு விலைக்கு விற்றவர்களின் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வட்ட வழங்கல் அலுவலருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி போலீஸார் தெரிவித்தனர்.