

ஹைதராபாத்
ஹைதராபாத்தில் உயிருடன் புதைக்கப்படவிருந்த 4 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் சொன்ன தகவலால் போலீஸார் துரித நடவடிக்கை எடுத்ததால் கடைசி நேரத்தில் அந்த பெண் குழந்தை மீட்கப்பட்டது.
ஹைதராபாத் அருகே உள்ள செக்குந்தராபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஜூப்ளி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் ஆள்நடமாற்றம் அற்ற பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அதை அந்தப் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக வந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் அவர் போலீஸில் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து அங்கிருந்த மூவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் தங்கள் கையில் இருப்பது இறந்தே பிறந்த குழந்தை என்று அந்த மூவரும் கூறியுள்ளனர். உடனே போலீஸார் குழந்தையை அருகாமையில் சென்று பார்த்தபோது குழந்தையின் கைகால்கள் அசைத்தது தெரிந்தது. மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து, மேற்கு மாரட்டப்பள்ளி காவல் ஆய்வாளர் ஏ.ஸ்ரீனிவாசுலு கூறும்போது, "ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின்படி எங்களின் காவலர் எஸ்.வேங்கட ராமகிருஷ்ணன் மற்றும் இன்னொரு காவலர் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
அங்கே ஒர் இளைஞர் குழி வெட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அருகில் நடுத்தர வயது கொண்ட நபர் ஒருவர் கையில் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்ட குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். இன்னொரு முதியவர் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்தார்.
முதலில் குழந்தை இறந்துவிட்டதால் அதை புதைப்பதாக மூவரும் கூறியுள்ளனர். பின்னர் குழந்தை அசைவதை போலீஸார் கண்டுபிடித்ததும் மூவரையும் உடனே கைது செய்து இங்கு அழைத்துவந்தனர்.
குழந்தை காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்குபேட்டரில் குழந்தை பராமரிக்கப் படுகிறது.
தொடர் விசாரணையில் குழந்தையின் தந்தை ராஜூ, தாய் மானஸா சங்கேபள்ளி கிராமத்தில் தினக் கூலிகளாக இருப்பது தெரியவந்தது. மானஸாவுக்கு அக்டோபர் 28-ம் தேதி கரீம்நகர் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் பிறப்புறுப்பில் கோளாறு இருந்ததால் அதனை ஹைதராபாத் நிலோஃபர் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். மானஸாவுக்கு பிரசவத்துக்குப் பின்னர் வலிப்பு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையிலேயே வைத்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் தந்தை, தாத்தா சேர்த்து பெண் குழந்தை பிறவியிலேயே குறைபாட்டுடன் இருப்பதால் அதனைக் கொன்றுவிடலாம் என்ற முடிவு செய்துள்ளனர். குழந்தையை உயிருடன் புதைக்கவே அந்த இடத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்” என்றார்.