

பிடிஐ
பல்வேறு யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டைக் கொள்ளையடித்ததாக நாக்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீடுகளில் கொள்ளையடித்து வந்த ஜோடியை நேற்று மாலை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஹசியாபஹாத் குடியிருப்பாளர் ஷைலேஷ் வசந்தா தும்ப்ரே (29) ஒரு எம்பிஏ பட்டதாரி. இவருடன் வசிப்பவர் கரிரி கோமடே (21). இங்குள்ள சித்ரகால மகாவித்யாலயாவில் கலை இளங்கலை மாணவர். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையில் திளைக்க விரும்பியதால் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மங்காபூர் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது:
"நூதனக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழும் இளம் தம்பதி. இவர்கள் யூடியூப்பில் பூட்டை உடைத்து கதவுகளைத் திறக்க கேஸ் கட்டர்கள் பயன்படுத்துவது உட்பட, வீட்டை உடைக்கும் பல்வேறு வீடியோக்களைப் பார்த்துள்ளனர்.
பூட்டு, தாழ்ப்பாள் போன்ற பொருட்களின் மீது எரிவாயு கட்டர் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் கொள்ளையடிப்பதில் திறன் பெற்றுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இங்குள்ள மங்காபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தம்பதியர் ரூ.2 லட்சம் கொள்ளையடித்துள்ளனர்.
அவர்கள் நாக்பூரின் கோரேவாடா பகுதியில் ஒரு வாடகை பங்களாவில் வசித்து வந்தனர். மேலும் அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர்.
திருட்டு ஒன்றின் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு தவணை முறையில் வாங்கிய ஆரஞ்சு காரை அவர்கள் பயன்படுத்திய பிறகு நாங்கள் அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினோம். எரிவாயு கட்டர், துப்பாக்கி, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் பிற கருவிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, அவர்கள் ஏடிஎம்களைத் திறப்பதற்கான நுட்பங்கள் குறித்து யூடியூப் வீடியோக்களைத் தேடிவருவதாக விசாரணையில் கூறினர். அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’’.
இவ்வாறு காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.