குழந்தையை கவனிக்க மறந்து தொலைக்காட்சி பார்த்த தூத்துக்குடி தம்பதி: அலட்சியத்தால் 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாப பலி

இடது ஓரம்: குழந்தை சஞ்சனா, நடுவில்: குழந்தை தவறி விழுந்த தண்ணீர் தொட்டி, வலது ஓரம்: உறவினர்கள்
இடது ஓரம்: குழந்தை சஞ்சனா, நடுவில்: குழந்தை தவறி விழுந்த தண்ணீர் தொட்டி, வலது ஓரம்: உறவினர்கள்
Updated on
1 min read

தூத்துக்குடி

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித்தை மீட்பதற்காக நடைபெற்றுவந்த மீட்புப் பணிகளை தொலைக்காட்சி நேரலையில் பார்த்துவந்த தூத்துக்குடி தம்பதி அலட்சியத்தால் தங்களின் 2 வயது குழந்தை பலியாகக் காரணமாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களது மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ).

மீனவரான லிங்கேஷ்வரன் நேற்று மாலை வீட்டில் தனது மனைவியுடன் நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்பது தொடர்பான நேரலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தொலைக்காட்சி பார்க்கும் சுவாரஸ்யத்தில் இருவரும் குழந்தையை கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்தே குழந்தையைக் காணாவில்லை என அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in