Last Updated : 24 Oct, 2019 05:16 PM

 

Published : 24 Oct 2019 05:16 PM
Last Updated : 24 Oct 2019 05:16 PM

வறுமையின் காரணமாக தாய், மகள்களுடன் தற்கொலை செய்தாரா?- தேனி சம்பவத்தில் திடீர் திருப்பம்- கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது

தேனி

தேனி மாவட்டம் போடியில் வறுமையில் வாடியதால், தாய் ஒருவர் பெற்ற 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் கிடைத்துள்ளது. கொலைக்குத் தூண்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். ஒரு பெண்ணை போலீஸார் தேடுகின்றனர்.

தேனி மாவட்டம் போடி போஜ் பஜாரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. சென்னையில் அரிசிக் கடை நடத்திவந்தார். தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் வேலைக்குச் சென்றார். உடல் நிலை குறைவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார்.

இதனால் அவரது மனைவி லட்சுமி (36) தனது 3 மகள்களுடன் அண்ணன் பாதுகாப்பில் போடியில் வசித்து வீட்டிலேயே துணிகள் தைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில், லட்சுமி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். வீடு திறக்காததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது அனுசுயாவும், ஐஸ்வர்யாகவும் பரிதாபமாக இறந்து கிடந்தனர். 3-வது மகள் அட்சாயவும் தாய் லட்சுமியும் உயிருக்குப் போராடிக் கிடந்தனர்.

வறுமை வாட்டுகிறது. பிள்ளைகள் படிக்கின்றனர், ஆனால் போதிய வருமானம் இல்லாததால் திருமண நேரத்தில் என்ன செய்யப் போகிறோம் என பயந்து பாலில் விஷம் கலந்து கொடுத்து அனுசுயா(18), ஐஸ்வர்யா(16), அட்சயா(10) ஆகிய 3 மகள்களைக் குடிக்கவைத்து தானும் தற்கொலை செய்ய முயன்றதாக அவர் போலீஸில் தெரிவித்தார்.

போலீஸார் மேற்படி இருவரையும் காப்பாற்றி தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிட்சையில் இருந்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்து விட்டார். அவரின் கடைசி மகள் அட்சயா மட்டும் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.

இந்நிலையில் வறுமையில் தற்கொலை செய்து கொண்டதில் போலிஸாருக்கு உடன்பாடு இல்லாமல் பல்வேறு கோணங்களில் விசாரித்து சில தகல்வல்களை சேகரித்து கண்காணித்து வந்தனர்.

பின்னர் உயிர்பிழைத்த மகள் அட்சயாவிடம் போலீஸார் தனியாக விசாரித்ததில் "லட்சுமியின் பெரியப்பா மகன் பாண்டியன் (47), இவரது மனைவி தனலட்சுமி(44), உறவினர் விஜயகுமார் (39), வெங்கிடாஜலபதி மனைவி செல்வத்தாய்(32) மற்றும் அம்பிகா ஆகிய ஐந்து பேர் சம்பவத்தன்று காலையில் வீட்டிற்கு பாலையும் விஷத்தையும் கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்து எல்லோரும் கலந்து குடித்து செத்துப்போங்கள் என மிரட்டினார்கள்.

வேறு வழியில்லாமல் அம்மாவும் வலுக்கட்டாயமாக பாலில் விஷத்தைக் கலந்து குடித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது" என்றார்.

மேலும் விசாரனையில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மூத்த மகள் அனுசுயா தாய்மாமனான பாண்டியனின் மகன் முத்துசாமியை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

அந்த விஷயம் தெரிய வந்ததால் மேற்படி 5 பேரும் சேர்ந்து 4 பேரையும் கொலை செய்வதற்கு மூலகாரணமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

போடி டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில், நகர் இன்ஸ்பெக்டர் வெங்கிடாஜலபதி மற்றும் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து பாண்டியன் அவரது மனைவி தனலட்சுமி, விஜயகுமார்,செல்வத்தாய் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான அம்பிகாவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x