

விருதுநகர்
தீபாவளி வசூல் வேட்டை சர்ச்சையில் சிக்கிய விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாசில்தார் இன்று (அக்.23) இடமாற்றம் செய்யப்பட்டார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருவாய்த்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.
குறிப்பாக வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
அதையடுத்து, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தாசில்தார் வானதியிடமிருந்து கணக்கில் வராத ரூ.29 ஆயிரம் ரொக்கம் மற்றும் 137 பட்டாசு பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, அலுவலக ஊழியர்களிடமும், தாசில்தார் வானதியிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தி சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாசில்தார் வானதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு தனி வட்டாட்சியர் நில எடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டையில் சமூக நலத்துறை தனி வட்டாட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த விஜயராஜ் வெம்பக்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.