

ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வீட்டுக்குள் புகுந்து நகையைப் பறித்த திருடனின் கையைக் கடித்து மூதாட்டி ஒருவர் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சிவசக்தி (84). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூவரும் பாண்டிச்சேரியில் பணியாற்றி வருகின்றனர்.
கணவர் இறந்ததால் மூதாட்டி சிவசக்தி மட்டும் சேத்தூரில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த சிவ சக்தியின் மேல் அமர்ந்து கழுத்தை நெறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்தார்.
அப்பொழுது நகை பறித்த இளைஞரின் கையை கடித்து மூதாட்டி சண்டையிட்டு உள்ளார். கையில் பலத்த காயமடைந்த இளைஞர் நகையுடன் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து சேத்தூர் காவல் நிலையத்தில் சிவசக்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த இளைஞரைத் தேடி வருகின்றனர்.
திருடனுடன் சண்டையிட்ட மூதாட்டி சேத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேத்தூர் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.