

சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மூதாட்டிக்கு மயக்க ஊசிபோட்டு 5பவுன் தங்கச் சங்கிலியை திருடிச்சென்ற மருந்து விற்பனை பிரதிநிதியை போலீஸார் கைதுசெய்தனர்.
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி லட்சுமியம்மாள் (60). கணவர் இறந்ததால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டுக்கு முன் இவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 4 நாள்களுக்கு முன் நோட்டமிட்டபடி பெட்டிக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் லட்சுமியம்மாளிடம் பேச்சுக்கொடுத்துள்ளார்.
அப்போது, தான் மருத்துவர் என்றும் உடல்நலக் குறைவு என்றால் கூறுங்கள், நான் மருந்து தருகிறேன் என்றும் பரிவோடு பேசியுள்ளார். அப்போது, தனக்கு மூட்டு வலி இருப்பதாக லட்சுமியம்மாள் கூறியுள்ளார். அதையடுத்து, மூதாட்டியை வீட்டுக்குள் அழைத்துச்சென்ற இளைஞர் மயக்க ஊசி போட்டு லட்சமியம்மாள் கழுத்தில் அணிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு தலைமறைவானார்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியம்மாள் புகார் கொடுத்தார். விசாரணையில், ஈரோடு மாவட்டம் பெரியசெட்டி பாளையம் இந்தியன் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (36) என்பவர் சந்தேகத்திற்கிடமாக வெம்பக்கோட்டையில் பைக்கில் சுற்றியது தெரியவந்தது.
அதையடுத்து, போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் மருந்து விற்பனை பிரதிநிதி என்பதும், குடும்பத்தைப் பிரிந்து வாழ்வதும், மூதாட்டிக்கு மயக்க ஊசி போட்டு நகை திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து, நந்தகுமாரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.