பிளாஸ்டிக் ஆலை தீ விபத்து வழக்கில் விருதுநகர் பிரபல இதய நோய் மருத்துவர் கைது

உள்படம்: கைதான மருத்துவர் ரத்தினவேல்
உள்படம்: கைதான மருத்துவர் ரத்தினவேல்
Updated on
1 min read

விருதுநகர்

விருதுநகரில் பிளாஸ்டிக் அரவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான வழக்கில் விருதுநகரைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் - சிவகாசி சாலையில் ஆத்துப்பாலம் அருகே மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்த பிளாஸ்டிக் அரவை ஆலை இயங்கி வந்தது. இங்கு, பழைய பிளஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டு நவீன இயந்திரங்கள் மூலம் அவை அரவை செய்யப்பட்டு, மறு சுழற்சிக்காகவும், பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்காகவும் ஒரு டன் பிளாஸ்டிக் ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இந்த பிளாஸ்டிக் அரவை ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஆலையில் இருந்து 75 டன் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான அரவை இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த ஆலைக்கு தீ வைத்ததாக அல்லம்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அர்ஜுணன் (32) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, விருதுநகரில் நகர்நல அமைப்பின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் பிரபல மருத்துவர் ரத்தினவேல்தான் குப்பைகளுக்கு தீ வைக்குமாறு கூறியதாகவும், அதன்படி, பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு வெளியே கிடந்த குப்பைக்குத் தான் தீ வைத்ததாகவும், தீ ஆலைக்குள் பரவி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, மருத்துவர் ரத்தினவேலையும் விருதுநகர் மேற்கு போலீஸார் இன்று கைதுசெய்தனர். பின்னர், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். மக்கள் செல்வாக்கப் பெற்ற மருத்துவர் கைதான சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in