Published : 17 Oct 2019 10:10 AM
Last Updated : 17 Oct 2019 10:10 AM

திருப்பூர் புறநகர் பகுதிகளில் துப்பாக்கி முனையில் வழிப்பறி: பிஹாரைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 இளைஞர்கள் கைது - 2 நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், தங்க நகைகள் பறிமுதல்

கொள்ளை கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்டவை.

திருப்பூர்

திருப்பூர் புறநகர் பகுதிகளில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பொதுமக்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கும்பலிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கும் சம்பவங்கள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தெக்கலூர் அருகே செயல்படும் பிரபல பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் உட்பட 6 பேர் கும்பல் ஒன்றுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் அருகே தங்கியுள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அவர்கள் 6 பேரையும் பிடித்த னர்.

அவர்கள், பிஹார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த எம். முஸ்தபா அன்சாரி (26), ஆர்.சந்தன்குமார் (22), ஏ.சந்தன்குமார் (33), பீகாரில் சிதமாரி பகுதியைச் சேர்ந்த எஸ்.நாவல் ஷா (20), ஆந்திர மாநிலம் நெல்லூர் கொலந்துரு கிராமத்தைச் சேர்ந்த அபி (எ) வி.பதி சுனில் (25), நீலகிரி மாவட்டம் பந்தலூர் உப்பட்டி பகுதியைச் சேர்ந்த வி.பிரதீப்குமார் (32) ஆகியோர் என்பதும், 6 பேரும் கூட்டு சேர்ந்து பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் ஆட்களை அழைத்து வரும் முகவர்களாகவும், அயர்னிங், டெய்லர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

பிஹாரிலிருந்து துப்பாக்கி வாங்கி வந்து, இருசக்கர வாகனத் தில் சென்று, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

அவர்களை நேற்று கைது செய்த தனிப்படை போலீஸார், 2 நாட்டு துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், கத்தி, கொள்ளை யடிக்கப்பட்ட தங்க சங்கிலிகள், 3 விலை உயர்ந்த அலைபேசிகள், ஏடிஎம் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x